Monday, January 22, 2018

கீர்த்தித் திருஅகவல் (19-26)

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்றஐம் முகங்க ளால்பணித்து அருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாய்அமர்ந்து அருளியும்
வெறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந்து அருளி

அருஞ்சொற்பொருள்:

ஐம்முகங்கள் - சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தத்புருடம், ஈசானம். நந்தம்பாடி - ஒரு தலம். ஆரியன் - குரு. நூறுநூறாயிரம் - கோடி.

பொழிப்புரை:

பின்னர் அந்த ஆகமங்களை ஐந்து முகங்களோடு மகேந்திர மலையில் தோன்றி ஐந்து முனிவர்களுக்கு ஓதி அருளியவன். நந்தம்பாடி என்னும் இடத்தில் நான்கு மறைகளை எடுத்து இயம்பும் முடிவில்லாத குருவாக அமர்ந்து இருப்பவன். அவன் வேறுவேறு உருவமும் வேறுவேறு தன்மையும் கொண்டு கோடிக்கணக்கான முறை எழுந்து அருளுபவன். அழகிய காளை மீது ஏறி வரும் ஈசன். இந்த உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டுத் தம் உடம்பில் ஒரு பகுதியைப் பெற்றுள்ள மாதுடன் வந்து அருள் செய்பவன்.

Friday, January 19, 2018

கீர்த்தித் திருஅகவல் (9-18)

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தொற்றுவித்து அருளியும்
கல்லா டத்துக் கலந்துஇனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்
கிராது வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறுஅது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்


அருஞ்சொற்பொருள்:

மகேந்திரம் - ஒரு மலை. கல்லாடம் - ஒரு தலம். நயப்பு - இனிமை. உறவு - நட்பு. பஞ்சப்பள்ளி - ஒரு தலம். பால்மொழி - பால் போன்ற இனிமையான மொழியை உடைய உமை. கிராதன் - வேடன். கிஞ்சுக வாய் - முள்முருக்கம் பூப்போன்ற சிவந்த வாய். கொங்கை - மலை. நல் தடம் - நல்ல நீர் நிலை. கேவேடர் - மீன் வலையன். கெளிறு - ஒரு வகை மீன். மாவேட்டு - பெரிய வேட்டை.

பொழிப்புரை:
ஏற்கனவே தாம் அருளிய ஆகமங்களை மகேந்திர மலையில் தோன்றுமாறு செய்தவன். கல்லாடம் என்னும் தலத்தில் அடியார்களுக்கு இனிதே அருள்பாலிக்கும் நன்மைகள் பொருந்திய உமாதேவியோடு நட்பு கொண்டவன். பஞ்சப்பள்ளி என்னும் தலத்தில் பால்போன்ற இனிய மொழி பேசும் உமையோடு கூடி இருந்து வேடனாகத் தோன்றி முள்முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினை உடைய உமையோடு நெருங்கி இருந்து ஞானத்தை வழங்கும் பாலைத் தன்னகத்தே கொண்ட முலையாகிய நல்ல நீர்நிலையில் நீராடியவன். மீனவன் வேடம் தாங்கி கெளிறு என்னும் மீனைப் பிடித்து அதனிடம் இருந்த ஆகமங்களை மீட்டவன்.

Friday, January 5, 2018

கீர்த்தித் திருஅகவல் (1-8)


சிவமயம்

தில்லையில் அருளிய 

2. கீர்த்தித் திருஅகவல்

சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை

[சிவபெருமான் தன்னுடைய அடியார்களை உய்விக்கும் பொருட்டு நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்களைப் பேசும் பகுதி]

நிலைமண்டில ஆசிரியப்பா

2. 

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத் துறந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்

அருஞ்சொற்பொருள்:
மூதூர் - பழமையான ஊர். இருள் - ஆணவ மலம். ஏற - முற்றிலும். மீதூர - மிகுமாறு.

பொழிப்புரை: 
தில்லை எனப்படும் பழமையான ஊரில் நடனம் ஆடிய திருவடியைப் பல உயிர்களில் பலமுறையும் பொருந்துமாறு செய்தவன். எண்ணற்ற மேலான பல குணங்களாக அழகுற விளங்குபவன். மண் உலகிலும் விண் உலகிலும் தேவர் உலகிலும் பல்வேறு கல்வியும் கலைகளும் தோன்றுமாறும் அழியுமாறும் செய்தவன். என்னைப் பற்றி இருந்த ஆணவ மல இருட்டை முற்றிலுமாக விலகுமாறு செய்தவன். தன்னுடைய அடியார்களின் உள்ளங்கள் அனைத்திலும் அன்பு மிகுமாறு செய்வதையே கொள்கையாகவும் சிறப்பாகவும் கொண்டவன்.

Thursday, January 4, 2018

சிவபுராணம்


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


திருவாசகம்

திருப்பெருந்துறையில் அருளிய

1. சிவபுராணம்

சிவனது அநாதி முறைமையான பழைமை

[தொடக்கம் என்ற ஒன்று இல்லாத சிவபெருமானது பழம் பெருமைகளைப் பேசும் பகுதி]

கலிவெண்பா

1. 

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்புஅறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தைஅடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்புஅறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய் உரைப்பன்யான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்குஒளியாய்
எண்இறந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்அடிகள் கண்டுஇன்று வீடுஉற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயாஎன ஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யாயின எல்லாம் போய்அகல வந்துஅருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விளக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துஉலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போல
சிறந்துஅடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள்ஓர்  ஐந்துஉடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்துஇருந்தாய் எம்பெருமான் வல்வினையோன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறம்தோல்போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம்தன்மேல் வந்துஅருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெருமானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுஉணர்வார் தம்கருத்தின்
நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்துஅறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குஉடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றுஎன்று
போற்றிப் புகழ்ந்துஇருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே  ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து


திருச்சிற்றம்பலம்

கீர்த்தித் திருஅகவல் (19-26)

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்றஐம் முகங்க ளால்பணித்து அருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாய்அமர்ந்து அருளியு...